புதுடெல்லி: உக்ரேனில் இருந்து நாடு திரும்பியுள்ள மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றற பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உருக்கமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரேன் மருத்துவ மாணவர், பெற்றோர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், தங்களுடைய நிலை குறித்து பிரதமர் அலுவலகம், சுகாதாரத் துறை, கல்வித்துறை அலுவலகங்கள், அதிபர் அலுவலகம் எனப் பல்வேறு இடங்களுக்கு கடிதம் அனுப்பியதாகவும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி புதுடில்லியில் உள்ள ராம்லீலா திடலில் உக்ரேனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
வேறு வழியின்றி இந்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
உக்ரேனில் இருந்து நாடு திரும்பியவர்களில் 12 ஆயிரம் பேர் இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்ததாகவும், இந்தியாவில் மொத்தம் உள்ள 600 மருத்துவக் கல்லுாரிகளில் தலா 20 மாணவர்களைச் சேர்த்துக்கொண்டால் கூட தங்களது எதிர்காலம் பாதிக்கப்படாது என்றும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
உக்ரேனில் மருத்துவம் படித்து வந்த சுமார் இருபதாயிரம் இந்திய மாணவர்்கள் நாடு திரும்பி உள்ளனர்.

