லக்னோ: நாடு முழுவதும் குரங்கம்மை பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, அம்மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் குரங்கம்மை பாதிப்பைக் கண்டறிய 16 ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில், குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரக்கூடிய அனைவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.
எனினும், அங்கு இதுவரை குரங்கம்மையால் யாரும் பாதிக்கப்படவில்லை.
குரங்கம்மைக்கான அறிகுறிகளுடன் டெல்லி வந்திறங்கும் விமானப் பயணிகள், விமான நிலையத்தில் இருந்து லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதியானது.
இதற்கிடையே வளைகுடா, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஹைதராபாத் வந்திறங்கும் பயணிகளை ராஜீவ்காந்தி அனைத்துலக விமான நிலையத்திலேயே வைத்து பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது என தெலுங்கானா அரசு கருதுகிறது.
இதற்கு அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு அம்மாநில அரசு கோரிக்கை விடுத்து காத்திருக்கிறது.
இதற்கிடையே, பெங்களூருக்கும் மங்களூருக்கும் பல்வேறு நாடுகளில் இருந்து நேரடி விமானம் மூலம் வரக்கூடிய பயணிகளுக்கு குரங்கம்மை சோதனை நடத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்திலும் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை.

