புதுடெல்லி: நாட்டைக் காக்க உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குவதாக நாட்டின் புதிய அதிபர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
கார்கில் போரின் வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில் அவர் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 1999 ஜூலை 26ஆம் தேதி கார்கில் போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.
நேற்று அந்த வெற்றியையும் போரில் உயிரிழந்த வீரர்களையும் நினைவுகூரும் வகையில், விஜய் திவாஸ் அனுசரிக்கப்பட்டது.
"நமது ராணுவத்தின் வீரத்திற்கான சின்னம்தான் கார்கில் விஜய் திவாஸ். நாட்டைக் காக்க உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்குத் தலைவணங்குகிறேன். அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நாட்டு மக்கள் அனைவரும் எப்போதும் கடமைப்பட்டிருப்பார்கள்," என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ வீரர்களின் வீரம் நாள்தோறும் மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"நமது நாட்டைக் காப்பாற்றுவதற்காக கார்கில் போரில் பங்கேற்று தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

