புதுடெல்லி: இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி நேற்று 3வது முறையாக அமலாக்கத் துறையில் முன்னிலையாகி நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கில் விளக்கமளித்துள்ளார்.
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வெளியிட்டு வந்த 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை இயக்குநர் களாகக் கொண்ட 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியது.
இதன் மூலம் ரூ.2,000 கோடி சொத்துகளை 'யங் இந்தியா' அப கரித்துள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு போட்டு அது டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி அது பற்றி மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக இது குறித்து ராகுல் காந்தியிடம் ஐந்து நாட்களாக சுமார் 50 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து விசாரணைக்கு முன்னிலையாகும்படி சோனியா காந்திக்கு இரண்டு முறை அழைப்பாணை அனுப்பப்பட்டது.
ஆனால் கொரோனா பாதிப்பால் அமலாக்கத்துறை முன் அவரால் முன்னிலையாக முடியவில்லை. அதிலிருந்து மீண்ட நிலையில் இம்மாதம் 21ஆம் தேதி அமலாக்கத்துறை இயக்குநர் அலுவலகத்தில் சோனியா காந்தி முதல் முறையாக முன்னிலையானார்.
அப்போது அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சோனியா காந்தியிடம் நேற்று முன்தினம் 2வது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசாரணை மாலை 7 மணி அளவில் நிறைவடைந்தது.
இந்த விசாரணையில் 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை நிறு வனத்தை 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியபோது சோனியாவின் பங்களிப்பு, நிறுவன நடவடிக்கைகளில் அவரது செயல்பாடுகள், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததா என்பது குறித்து அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி அவரது பதில்களை பதிவு செய்தனர்.
இதையடுத்து, சோனியா காந்தி நேற்று மீண்டும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதனால் நேஷனல் ஹெரால்டு வழக்கில் 3வது முறையாக நேற்று அமலாக்கத்துறை முன்பு சோனியா காந்தி முன்னிலையானார்.
இதற்கிடையே நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப் பதாகவும் அதனால் அவரிடம் விசாரணை நிறைவு பெறலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
முதல் இரண்டு நாள்களும் சோனியாவுடன் அவரது மகள் பிரியங்கா காந்தியும் சென்றிருந்தார்.ஒரு மருத்துவக் குழுவும் தயார் நிலையில் விசாரணை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சோனியா காந்தி விசாரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கு பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி யாகச் செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், நிர்வாகி கள் ஈடுபட்டனர். ராகுல் காந்தி உட்பட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டம் குறித்து டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஜிஎஸ்டி, அக்னிபாத் உள்ளிட்டவை குறித்து யார் கேள்வி கேட்டாலும் அவர்களை சிறையில் அடைக்குமாறு இந்த நாட்டின் ராஜா உத்தரவிட்டுள்ளார் என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளே விவாதம் நடத்த அவர்கள் மறுப்ப தாகவும் வெளியே எங்களை அவர்கள் கைது செய்கிறார்கள் என்றும் ராகுல் கூறினார்.
நேற்று புதுடெல்லியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் தலைமுடியைப் பிடித்து காவல்துறை யினர் இழுப்பதைக் காணொளி ஒன்று காட்டியது.
"அவர்கள் என்னைத் தாக்கினர். முடியைப் பிடித்து இழுத்தனர்," என்று ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

