புதுடெல்லி: எம்.பி.க்கள் இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நேற்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் 20 மாநிலங் களவை எம்.பி.க்கள் மற்றும் நான்கு மக்களவை எம்.பி.க்கள் உட்பட இடைநீக்கம் செய்யப்பட்ட 24 எம்.பி.க்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை 50 மணி நேரம் பகல்-இரவு போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்டவை தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் நடப்பு கூட்டத் தொடரின் எஞ்சிய நாள்கள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேல்சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 13 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப் படுவதாக சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார்.
அவர்கள் இந்த வாரம் முழு வதும் சபைக்கு வர தடை விதிக்கப்பட்டது.
இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேரும் அடங்குவர். திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஏழு எம்.பி.க்கள், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த 2 பேரும் இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த ஒருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மேல்சபையில் நேற்று மேலும் ஒரு எம்.பி. சபை பங்கேற்புக்குத் தடைவிதிக்கப் பட்டது.
மேல் சபையின் நேற்றைய கூட்டத்தின்போது காகிதங்களைக் கிழித்து அதை அவைத் தலைவரின் இருக்கை முன்பு எறிந்த காரணத்திற்காக ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய்சிங் இவ்வாரம் முழுவதும் கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டார்.

