காங்கோ: காங்கோவில் ஐ.நா. அமைதிப்படைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இரு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோவில் பயங் கரவாத அமைப்புகளும் கிளர்ச்சியாளர் குழுக்களும் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள் அந்நாட்டு மக்கள் மற்றும் அரசுப் படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்கு தலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் காங்கோவில் அமைதியை நிலைநாட்ட அரசுப் படை களுக்கு ஆதரவாக ஐ.நா.வின் அமைதிப்படை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அமைதிப்படையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இருந்தாலும் காங்கோவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் ஆத்திரம் அடைந்த மக்கள் அந்நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள புடிம்போ நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிப்படை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர். பாதுகாப்பு படையினரின் துப்பாக்கியைப் பறித்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த வன்முறையில் ஐநா அமைதிப் படையைச் சேர்ந்த இரு இந்திய வீரர்கள் உட்பட மூன்று பேர் மாண்டனர். இந்த வன்முறைக்கு ஐ.நா. பொதுச்செயலாளரும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் கண்டனம் தெரிவித்தனர்.

