கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமனங்களில் பெரும் மோசடி நடந்துள்ளது. இதன் தொடர்பில் அம்மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே 20 கோடி பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது மேலும் 21 கோடி கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மூன்று பெரிய பணம் எண்ணும் இயந்திரங்கள் மூலம் எண்ணும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து பார்த்தா சட்டர்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் வீடுகளில் கடந்த வாரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அந்தச் சோதனையில் தற்போது வங்கிகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில்கூட கிடைக்காத 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ரூ. 21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அமைச்சரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி ஆகியோரை வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அண்மைய சோதனையில் மேலும் 29 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பணத்தை எண்ணும் பணியை புதன்கிழமை மதியம் முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடங்கினர்.
மூன்று பெரிய எண்ணும் இயந்திரங்கள் மூலம் எண்ணப்பட்ட நிலையில் ரூ.20 கோடி இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. பணத்தை எண்ணும் பணி தொடர்வதால் அர்பிதாவின் தெற்கு கோல்கத்தா வீட்டில் கைப்பற்றப்பட்ட 22 கோடி பணத்தைவிட இது அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்பிதா முகர்ஜியின் இரண்டு வீடுகளில் இருந்தும் ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

