அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அகமதாபாத் போடாட் மாவட்டங்களில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதிகளைச் சேர்ந்த பலரும் வாங்கிக் குடித்துள்ளனர். சாராயம் குடித்த சில மணி நேரங்களில் உடல்நலக் குறைவு, மயக்கம் காரணமாக பலருக்கு அவதி ஏற்பட்டது. போடாட் மாவட்டத்தில் மட்டும் 31 பேர் இறந்து விட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி அஷோக் யாதவ் தெரிவித்தார். அகமதாபாத்தில் மேலும் 11 பேர் உயிரிழந்தனர் என்று அம்மாவட்ட அதிகாரி வி.சந்திர சேகர் கூறினார். காவல்துறை விசாரணை தொடர்கிறது.

