மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமங்கலம் என்ற கிராமத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் கிட்டத்தட்ட 800 மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த 60 வயது மாதை ஆத்தா, ஆத்தா என்றுதான் செல்லமாக அழைக்கிறார்கள்.
திருமங்கலத்துக்கு அருகே இருக்கும் நத்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பானுமதி என்ற அந்த மாது கணவனை இழந்தவர்.
மூன்று ஆண் பிள்ளைகளைப் பெற்றாலும் அந்தப் பிள்ளைகள் திருமணம் செய்துகொண்டு தங்கள் மனைவி ஊர் பக்கம் போய் வசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
சிறிய வீட்டில் பானுமதி மட்டும் தனிமையில் வாடுகிறார். உறவு, ஒத்துழைப்புக்கு யாரும் இல்லாத நிலையில் உழைத்து வாழ வேண்டும் என்ற கட்டாயம்.
"கூலி வேலை செய்து பிழைக்கலாம் என்றால் என்னுடலில் போதிய தெம்பு இல்லை.
"ஆகையால், பேருந்தில் மயிலாடுதுறை அல்லது சீர்காழி வரை சென்று சீடை, முறுக்கு, ரொட்டி, கடலைமிட்டாய் போன்ற தின்பண்டங்களையும் பென்சில், பேனா, ரப்பர் போன்ற பொருள்களையும் வாங்கி வந்து திருமங்கலம் பள்ளிக்கூட நுழைவாயிலில் மாணவர்களுக்கு விற்று பிழைக்கிறேன்," என்கிறார் பானுமதி.
"ரூ.500 கொடுத்து பொருள்களை, பண்டங்களை வாங்கி வருவேன். நாள் ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை எனக்குக் கிடைக்கும்.
"சனி, ஞாயிறு நாள்களில், பள்ளி விடுமுறை நாள்களில், கோடை விடுமுறை நாள்களில் வீட்டிலேயே முடங்கிக்கிடப்பேன்.
"இப்படியாகத்தான் நான் வாழ்கிறேன்," என்று கூறிய பானுமதி, அப்போதைக்கு அப்போது அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தார்.
அது பற்றி கேட்டபோது, "பள்ளிக்கூடத்தின் உள்ளே நான் செல்லக்கூடாது. வாசலுக்கு வெளியே கம்பிக் கதவு ஓரமாகத்தான் வெளியில் இருந்து பொருள்களை விற்க முடியும்.
"மாணவர்களுக்கு முற்பகல் 11 மணி முதல் 11.30 வரை இடைவேளை. பிறகு 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு நேரம். அந்த நேரங்களில்தான் நான் விற்க முடியும். பொதுவாக இடைவேளை நேரத்தில் மாணவர்கள் வெளியே வரக்கூடாது. ஆனால் அவர்களைக் கட்டுப்படுத்துவது இலேசான காரியம் அல்ல.
"சில நேரங்களில் என்னிடம் பொருள் வாங்குவதற்காக மாணவர்கள் ஆர்வத்துடன் வெளியே ஓடி வந்துவிடுவார்கள். இதனால் ஆசிரியர்களிடத்தில் நான் திட்டு வாங்க வேண்டும்.
"அதனால் அப்போதைக்கு அப்போது நிமிர்ந்து பார்த்து பள்ளிக்கூட நுழைவாயில் கதவு மூடி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வேன்.
"இரண்டு ரூபாய்க்கு மிட்டாய், ஐந்து முறுக்கு இருக்கும் பொட்டலம் ஐந்து ரூபாய். ரப்பர், பென்சில், பேனா எல்லாம் தலா ஐந்து ரூபாய். சில நேரங்களில் சிறுமிகளுக்கு ரிப்பன் நாடாவும் விற்கிறேன்," என்று கூறும் பானுமதி, காலையில் 10 மணிக்கு எல்லா பொருள்களை யும் தலையில் சுமந்துகொண்டு பள்ளிக்கூடத்துக்கு வந்துவிடுவதாகத் தெரிவித்தார்.
"திருமங்கலம் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே, அந்தப் பள்ளியில் வேலை செய்யும் ஓர் ஆசிரியரின் வீடு இருக்கிறது. அவரின் உதவியுடன் அந்த வீட்டில் பொருள்களை வைத்து நடுநடுவே சிறிது நேரம் ஓய்வு எடுப்பேன்.
"மதியம் 2 மணிக்கு மூட்டை யைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டுவிடுவேன்," என்று கூறிய பானுமதியைப் பார்த்து இப்படித்தான் உங்கள் காலம் ஓடுகிறதா என்று கேட்டேன்.
"என்னய்யா செய்வது? இந்தப் பிள்ளைகளைப் போல் நான் சிறுமி யாக இருந்த காலத்தில் மதிய உணவுடன் இலவச கல்வி கொடுத்தார்கள். ஆனால் பள்ளிக்கூடம் சென்று நான் படிக்கவில்லை. அதை ஒரு பாவமாக இப்போது நான் நினைக்கிறேன்.
"அந்தப் பாவத்தை அன்றாடம் பள்ளிக்கூடத்துக்கு வந்து போக்கு கிறேன். படிப்பதற்காக அல்ல. என் வயிற்றுப் பிழைப்புக்காக.
"பிள்ளைகள் படிக்க வேண்டிய காலத்தில் படித்துக்கொள்ள வேண்டும். படிப்பைக் கிள்ளுக்கீரையாகக் கருதவே கூடாது," என்று பானுமதி என்னிடம் கூறியபோது பள்ளிக்கூடம் உள்ளே இருந்து மூன்று, நான்கு ஆசிரியர்கள் வெளியே ஓடி வந்தார்கள்.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் மிட்டாய் வாங்க வரும் சாக்கில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே ஓடி பக்கத்தில் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் ஓடும் வாய்க்கால் பக்கம் நிற்கிறார்கள் என்று அந்தப் பக்க மாக வந்த ஒருவர் கூறியதைக் கேட்டு ஆசிரியர்கள் அந்த மாணவர்களைக் கூட்டிவர ஓடினார்கள்.
இந்தச் சம்பவத்தைப் பார்த்த நான், பானுமதி ஆத்தா பக்கம் திரும்பியபோது, "பார்த்தீர்களா அய்யா, இதற்கும் நான்தான் பொறுப்பேற்க வேண்டும்.
"மிட்டாய் வாங்கும் சாக்கில் அந்த மாணவர்கள் வெளியே ஓடிவிட்டதாக என்னைத்தான் ஆசிரியர்கள் திட்டுவார்கள்," என்று பரிதாபமாக ஆத்தா கூறினார்.
"பண்டங்கள் வாங்கும் சாக்கில் காசு கொடுக்காமல் ஓடிவிடும் பிள்ளைகள், கடனுக்கு வாங்கும் பிள்ளைகள், கை நீளும் பிள்ளைகள் இருக்கிறார்கள் அய்யா.
"என் பேரப்பிள்ளைகள் போன்று அனுசரித்துப் போகிறேன். ஆசிரியர்களும் கருணையுடன் என்னை அனுமதிக்கிறார்கள்.
"'இல்லை என்றால் கொரோனா காலத்தில் வீட்டிலேயே அடைந்து கிடந்து பட்டபாட்டையே தொடர்ந்து நான் படவேண்டி இருக்கும்," என்றார் அந்த மாது.
ஆத்தாவை நினைத்தபடியே அவரிடமிருந்து விடைபெற்று புறப்பட்டபோது என் மனதில் என்னுடைய பள்ளிக்கூட காலம் நினைவுக்கு வந்தது. அந்த நினைவுடன் ஆத்தா விடம் ஐந்து ரூபாய் கொடுத்து முறுக்குப் பொட்டலம் வாங்கினேன்.
பொட்டலத்தையும் ஆத்தாவையும் பள்ளிக்கூடத்தையும் பார்த்தபடியே புறப்பட்டேன்.

