புதுடெல்லி: சீனாவின் ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கையை நோக்கிச் செல்லவிருப்பதால் இந்தியா தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இலங்கையின் தெற்கே ஹம்பன்தோட்டாவில் துறைமுகத்தைக் கட்டியிருக்கும் சீனா அதனை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறது. சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2 பி.) மதிப்பிலான அந்த துறைமுகம், ஆசியா-ஐரோப்பாவின் முக்கிய கடல் போக்குவரத்துக்கு அருகே அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை சீனா தனது ராணுவத் தளமாகப் பயன்படுத்தக்கூடும் என்பதால் இந்தியா தனது கவலையை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் யுவான் வாங்-5 எனும் அந்த ஆய்வுக் கப்பல் ஹம்பன்தோட்டாவை நோக்கிச் செல்வதாக 'ரிஃபினிட்டிவ் எய்க்கோன்' புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. ஆகஸ்ட் 1ஆம் தேதி அந்தக் கப்பல் ஹம்பன்தோட்டா துறை முகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியில் சிக்கி நொடித்துப் போயிருக்கும் இலங்கைக்கு அண்டை நாடான இந்தியா இவ்வாண்டு மட்டும் நாலரை பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஆதரவு வழங்கியிருக்கிறது.
கடந்த வியாழக்கிழமை வாராந்திரக் கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர், சீனக் கப்பலின் திட்டமிட்ட பயணத்தை இந்திய அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறினார்.
இந்த விவகாரத்தில் இந்தியா, அதன் பொருளியல் மற்றும் பாது காப்பு நலன்களைப் பாதுகாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கெண்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் சந்திப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இலங்கை இதில் கலந்துரையாடும் பங்காளி நாடாக உள்ளது. ஆனால் வருகின்ற மாநாட்டில் அது பங் கேற்குமா என்பது தெரியவில்லை.
சீனக் கப்பலின் பயணம் குறித்து இலங்கை அரசிடம் ஏற்கெனவே இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவும் கப்பல் வருகை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. சீன வெளி யுறவு அமைச்சும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
இலங்கை பொருளியல் பாதை திட்டத்தின் இலங்கை ஆலோசனை நிறுவனம் ஒன்று, ஹம்பன் தோட்டாவில் ஒரு வாரம் இருக்கும் யுவான் வாங்-5 கப்பல் அங்கு இந்திய கடற்பகுதியின் தென் மேற்கில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கைக்கோள் கட்டுப்பாடு உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபடும் என்று தெரிவித்தது.
இலங்கை அரசாங்கம், கடனை அடைக்க முடியாமல் 2017ஆம் ஆண்டில் ஹம்பன்தோட்டா துறை முகத்தை சீன நிறுவனத்திடம் 99 ஆண்டு குத்தகைக்கு ஒப்படைத்தது.

