புதுடெல்லி: ராஜஸ்தானில் 'மிக்-21' ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். பார்மர் மாவட்டத்தில் மிக் 21-ரக போர் விமானம் வியாழக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இரவு 9 மணியளவில் அந்த போர் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. விமானம் முழுவதும் எரிந்து நாசமானதில் இரண்டு விமானிகளும் பலியாகினர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் அனுப்பப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜனவரியிலிருந்து மிக்-21 ரக விமானம் விபத்துக்குள்ளாவது இது ஆறாவது முறையாகும். இதுவரை ஐந்து விமானிகள் மாண்டனர்.
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட நிழற்படங்களில் பெரிய இடத்தில் விமானத்தின் சிைதந்த பாகங்கள் சிதறியிருந்ததைக் காண முடிந்தது. இதற்கிடையே விபத்து குறித்து விமானப் படையிடம் விவரங்களைக் கேட்டறிந்த தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானி களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

