ஸ்மிருதி இரானி வீட்டு முன் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஏற்பட்ட மோதலால் ஸ்மிருதி இரானி வீட்டு முன் நேற்று காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் திரௌபதி முர்மு பற்றி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தவறுதலாக தெரிவித்த கருத்து புதிய சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு சோனியா காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
ஆனால் தனது பெயரை ஏன் இந்த விவகாரத்தில் இழுக்க வேண்டும் என்று கேட்ட சோனியா காந்தி, இனி தன்னிடம் பேச வேண்டாம் என்று ஸ்மிருதி இரானியிடம் காட்டத்துடன் கூறினார். இந்தப் பரபரப்பான சூழ் நிலையில் ஸ்மிருதி இரானி வீட்டு முன் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோரை அதிபர் திரௌபதி முர்மு நேற்று அழைத்துப் பேசியிருக்கிறார். பேச்சு விவரம் தெரிவிக்கப்படவில்லை.
கர்நாடகாவில் 3வது கொலை
பெங்களூரு: கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தைச் சேர்ந்த தட்சிண கன்னடா மாவட்ட பாரதிய ஜனதா இளைஞர் அணி செயற்குழு உறுப்பினரான பிரவீன், 32, இம்மாதம் 26ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் ஹாவேரி மாவட்டம் சவனூரைச் சேர்ந்த ஜாகீர், 29, பெல்லாரேவைச் சேர்ந்த முகமது ஷபிக், 27 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் மங்களூரு அருகே சூரத்கல் மங்களாபேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது பாசில் என்பவர் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷியா சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் முகமது பாசில் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 10 நாள்களில் மூன்று கொலைகள் நடந்துள்ளன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

