கௌகாத்தி: சோதனை நடவடிக்கைகளின்போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் முழுவதையும் அசாம் மாநிலக் காவல்துறை ஒட்டு மொத்தமாக அழித்தது. அவற்றின் மொத்த மதிப்பு 2,000 கோடி ரூபாயாகும்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புல்டோசர் கொண்டும் தீயிட்டுக் கொளுத்தியும் போதைப்பொருள்கள் அழிக்கப்பட்டன.
கச்சார் மாவட்டத்தில் மொத்தம் 6.214 கிலோ ஹெராயின், 683 கிலோ கஞ்சா, 271 கிலோ இருமல் மருந்து, 6,004,443 போதை மாத்திரைகள் ஆகியவை அழிக்கப்பட்டன.
மேலும், கரீம்கஞ்ச் மாவட்டத்தில், 5.185 கிலோ கஞ்சா, 595,366 போதை மாத்திரைகள், 3.65 கிலோ ஹெராயின் ஆகியவை அழிக்கப்பட்டன.
மேலும், கௌகாத்தி நகரிலும் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் அழிக்கப் பட்டதாக அசாம் மாநிலக் காவல்துறை தெரிவித்தது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அசாம் மாநிலம் வழியாக சமூக விரோதிகள் அதிக அளவில் போதைப் பொருள்களைக் கடத்துவதாகக் கிடைத்து வரும் தகவல்களை அடுத்து, காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

