கடலில் குளித்தபோது நேர்ந்த துயரம்: கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் பலி
அமராவதி: தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 15 மாணவர்கள் அனகாப்பள்ளி சீதாபாலம் கடற்கரைக்குச் சென்றிருந்தனர். அவர்களில் ஏழு மாணவர்கள் கடலில் குளித்த நிலையில், பெரிய அலை ஒன்று அவர்களை இழுத்துச் சென்றது. அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து மாணவர்களை மீட்க முயன்றனர். எனினும் ஒருவரை மட்டுமே மீட்க முடிந்தது. இதையடுத்து கடற்படை வீரர்களின் உதவியோடு மற்றவர்களை தேடும்படலம் தொடங்கியது. எனினும் ஆறு பேரையும் சடலமாக மட்டுமே மீட்க முடிந்தது.
கோதாவரி ஆற்று வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட கோவில்
அமராவதி: கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதன் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரையோரப் பகுதிகளில் ஒன்றான புருஷோத்தப்பட்டினத்தில் அமைந்திருந்த வனதுர்க்கையம்மன் கோவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தொடர் மழை காரணமாக கரையோரத்தில் இருந்த கோவிலுக்குள் தண்ணீர் புகுந்ததுடன், கரையில் அரிப்பு ஏற்பட்டு, கோவிலின் அஸ்திவாரம் சாய்ந்தது. இதனால் அந்தக் கோவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதி பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகளை வேட்டையாட உதவிய ராணுவ மோப்ப நாய் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: பயங்கரவாதி களுடன் நிகழ்ந்த மோதலின்போது இந்திய ராணுவத்தின் மோப்ப நாய் ஒன்று கொல்லப் பட்டது (படம்). ஆக்சல் என்ற பெயரைக் கொண்ட அந்த மோப்ப நாய் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க உதவி வந்தது. இந்நிலையில், நேற்று ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டின்போது ஆக்சல் மீது குண்டு பாய்ந்ததில் அது வீரமரணம் அடைந்தது. இந்தத் தாக்குதல் நடவடிக்கையின்போது மூன்று பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர் என்றும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார் என்றும் ராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

