மாவட்ட, கீழ் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவை
புதுடெல்லி: இந்திய நீதிமன்றங்களில் சுமார் ஐந்து கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 72,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"நாடு முழுவதும் 25 உயர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் தேஙகி உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 25ஆம் தேதி நிலவரப்படி 5,955,873 ஆகும்.
மாவட்ட அளவிலான நீதிமன்றங்கள், கீழ் நீதிமன்றங்களில் ஆக அதிகமாக 4.23 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 4.83 கோடி வழக்குகள் ஆகும்," என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தமது பதிலில் தெரிவித்துள்ளார்.
நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்று குறிப்பிட்டுள்ள அவர், அதில் அரசுக்கு எந்தவித பங்கும் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், வழக்குகளை முடிக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
"வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை, வாய்தா உள்பட பல காரணங்கள் உள்ளன," என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார்.
நாடு முழுவதும் குற்றவியல் அல்லாத சிறு வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதையடுத்து மத்திய அரசு, மக்கள் நீதிமன்றம் என்று குறிப்பிடப்படும் லோக் அதாலத் மூலம் வழக்குகளை முடித்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நீதிமன்றங்கள் ஒரே நாளில் பல ஆயிரக்ககணக்கான வழக்குகளை முடித்து வைக்கின்றன. குறிப்பாக சாலை விபத்துகள், நஷ்ட ஈடு தொடர்பாக நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வழக்குகளில் இரு தரப்பினரிடம் நேரடியாகப் பேசி, தீர்வு காணப் படுகிறது.
வழக்குகளின் எண்ணிக்கை குறைய வேண்டுமெனில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட சில ஆலோசனைகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அண்மையில் வழங்கி இருந்தார்.