புதுடெல்லி: மிக்-21 போர் விமானங்களை எதிர்வரும் 2025 முதல் பயன்படுத்துவதில்லை என இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.
கடந்த 1964ஆம் ஆண்டில் இருந்து இதுவரை மொத்தம் 1,200 மிக்-21 ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையில், சேர்க்கப்பட்டுள்ளன. எனினும் இவற்றுள் 113 விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
கடந்த 1970ஆம் ஆண்டில் இருந்து இது நாள் வரை மிக்-21 விமானங்களுடன் தொடர்புடைய விபத்து களில் சிக்கி 170க்கும் மேற்பட்ட விமானப்படை விமானிகளும் 40 பொது மக்களும் உயிர் இழந்துள்ளனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் மிக்-21 போர் விமானம் விபத்தில் சிக்கி, வெடித்துச் சிதறியதில் இரண்டு விமானிகள் உயிர் இழந்துள்ளனர்.
மிக்-21 ரக விமானங் களுடன் தொடர்புடைய விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றை 2025ஆம் ஆண்டுக்குள் விமானப் படையில் இருந்து முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1966 முதல் 1984 வரையில் விபத்துகளின் மூலம் 840 மிக்-21 விமானங்களை விமானப் படை இழந்து உள்ளது. இவற்றுக்கு பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்பட்டாலும் மோசமான பராமரிப்பும் இயந்திர கோளாறும்தான் முக்கிய காரணங்கள் எனக் கூறப்படுகிறது.

