அகமதாபாத்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயதுச் சிறுமி சுமார் ஐந்து மணி நேரத்துக்குப் பின் மீட்கப்பட்டாள். இந்தப் பணியில் ஈடுபட்ட குஜராத் மாநில தீயணைப்பு மீட்புப் படையினர், காவல்துறையினருக்கும் ராணுவத்தினருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.
குஜராத் மாநிலம், சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ளது கஜநப் கிராமம். இங்கு பெற்றோருடன் வசித்து வருகிறாள் சிறுமி மனிஷா.
நேற்று முன்தினம் காலை சுமார் 7.30 மணியளவில் தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள தோட்டத்துக்கு விளையாடச் சென்ற மனிஷா, எதிர்பாராதவிதமாக அங்கு மூடப்படாமல் இருந்த எழுநூறு அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டாள்.
சுமார் அறுபது அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட சிறுமி உதவி கேட்டு, கண்ணீர் மல்க குரலெழுப்ப, பெற்றோரும் அப்பகுதி மக்களும் அவளைத் தேடினர்.
பின்னர் மனிஷா ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி அழ, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.
கிணற்றுக்குள் சிக்கிய சிறுமி மனிஷாவின் நிலை கேமரா உதவியுடன் கண்காணிக்கப்பட்டு மீட்புப் பணி தொடங்கியது. சிறுமிக்குத் தேவையான உயிர்வாயு செலுத்தப்பட்டது.
ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பின்பு மனிஷா உயிருடன் மீட்கப்பட்டாள். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவள் நலமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மனிஷாவின் பெற்றோர் நன்றி கூறினர்.

