புதுடெல்லி: மின்சார நிலுவைத் தொகையை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மின்சாரத் துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் மோடி, மாநில அரசுகள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு சுமார் 75,000 கோடி ரூபாய் மானியம் வழங்காததற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். மாநில அரசுகள் மின்சார நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய சுமார் 2.5 லட்சம் கோடி நிலுவைத்தொகையை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு செலுத்தாத காரணத்தினால் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் முடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கோல்கத்தா: அதிபர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தமைக்காக மேற்குவங்க காங்கிரஸ் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக அதிபர் திரௌபதி முர்முவுக்கு அவர் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார். அதில், அதிபர் பதவி குறித்து பேசும்போது, தாம் தவறான வார்த்தையைப் பயன் படுத்தியதாகவும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "அது நிச்சயமாக வாய்தவறி நடந்த நிகழ்வுதான் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் நான் மன்னிப்பு கோருகிறேன். எனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்," என்று ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ், நேட்டா டிசோஷா ஆகிய மூவரும் 24 மணி நேரத்திற்குள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரது மகள் குறித்த அவதூறான சமூக ஊடகப் பதிவுகளை நீக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், நீதிமன்றத்தின் முன்னால் உண்மைகளை நிரூபிக்க காத்தி ருப்பதாகவும் சவாலை எதிர்கொண்டு இரானியின் புரட்டுகளை வெளிக்கொண்டு வருவது உறுதி என்றும் கூறியுள்ளார்.
டுவிட்டர்: இந்திய அரசு முதலிடம்
புதுடெல்லி: செய்தியாளர்கள், செய்தி நிறுவனங்கள் பதிவிடும் செய்திகளை நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. செய்திகளை பதிவிடும் செய்தியாளர்களின் கணக்குகளை முடக்கச் சொல்வதிலும் இந்திய அரசு முதலிடத்தில் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் வேளையில் இத்தகவல் வெளியாகியுள்ள தால் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுக்கும் எனக் கூறப்படுகிறது.

