கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜியை, ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் கடந்த மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேற்கு வங்க அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜி வீடுகளில் அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் நடத்திய சோதனையில் ரூ.50 கோடி பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, பார்த்தா சட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் உடனடியாக நீக்கினார் மம்தா பானர்ஜி.
கடந்த மூன்று ஆண்டுகளாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், முதன்முறையாக நேற்று முன்தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்து விரிவாக்கம் செய்யப்பட்டு ஒன்பது புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
புதிதாக அமைச்சராகப் பதவியேற்றவர்களில் பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ முக்கியமானவர்.
கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரசில் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு முழு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஸ்னேகாஷிஷ் சக்கரவர்த்தி, பார்த்தா பவுமிக், உதயன் குஹா மற்றும் பிரதிப் மஜும்தார் ஆகியோரும் முழு அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதுதவிர, பிர்பஹா ஹன்ஸ்தா, விப்லவ் ராய் சௌத்ரி, தாஜ்முல் ஹுசைன் மற்றும் சத்யஜித் பர்மன் ஆகியோர் இணை அமைச்சர்களாகப் பதவியேற்றனர். முன்னதாக, கடந்த திங்கள்கிழமை கட்சியின் 16 மாவட்டச் செயலாளர்களை மாற்றி முதல்வர் மம்தா உத்தரவிட்டார். அத்துடன் மாநிலத்தில், புதிதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதன்மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் மொத்த மாவட்டங்கள் எண்ணிக்கை 30ஆக அதிகரிக்கும். புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதிஅளித்துள்ளதாக முதல்வர் மம்தா ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிவித்தார்.
அந்தப் புதிய மாவட்டங்கள் சுந்தர்பன், இச்சாமதி, ரனாகாட், பிஷ்னாபூர், ஜாங்கிபூர், பெர்ஹம்பூர் மற்றும் பசிர்ஹாட்டில் ஒரு மாவட்டமும் அடங்கும்.
இதுகுறித்து அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.