புதுடெல்லி: நாடு முழுவதும் பரவலாக சுமார் 150,000 ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் அமைக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் இந்தச் சுகாதார மையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று மாநிலங்களவையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
மாநிலங்களவையில் 'சுகாதார உரிமை மசோதா 2021' என்ற தனிநபர் மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.
"ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 150,000 சுகாதார மையங்களை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இப்போது 122,000 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
"எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிர்ணயித்த இலக்கின்படி அனைத்து மையங்களும் செயல்பாட்டுக்கு வரும்," என்றார் அமைச்சர் மன்சுக் மாண்டவியா.
இப்புதிய சுகாதார மையங்களில் மார்பக, வாய் உள்ளிட்ட மூன்று வகை புற்றுநோய்கள், 13 தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட அவர், சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ஏழைகளுக்கும் சுகாதார வசதி எளிதாக கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
ஆயுஷ்மான் சுகாதார மையங்களில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றுக்கும் இலவசமாக பரிசோதனைகள் செய்யப்படும். தமிழகத்தில் இந்த மையங்கள் மூலம் கடந்த மார்ச் மாத இறுதி வரை 542,070 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் சார்பில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ. 2,600 கோடியும் சுகாதார மையங்களுக்கான உள் கட்டமைப்புக்கு ரூ.404 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

