ஜம்மு: காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ முகாமில் இரண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர். எனினும் அந்த இரண்டு பயங்கரவாதிகளையும் இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
இதனால் இந்திய ராணுவ முகாமை ஊடுருவி பெரும் சேதம் ஏற்படுத்தும் பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டது.
இன்று(ஆகஸ்ட் 11) அதிகாலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைப் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியது. ரஜோரி மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராணுவ முகாமில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் ராணுவ முகாமை தகர்க்கும் வகையில் 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
லக்ஷ்மணன் டி, மனோஜ் குமார், ராஜேந்திர பிரசாத் ஆகிய மூன்று வீரரகள் இந்தத்தாக்குதலில் உயிர் இழந்தனர்.
இந்தியாவில் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி வருகிற 13, 14, 15-ந்தேதிகளில் தேசிய கொடியை வீடுகளில் ஏற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தினத்தை மிக விமரிசையாக இந்த ஆண்டு கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 75-வது ஆண்டு சுதந்திர தினம் என்பதால் நாடுமுழுவதும் 75 இடங்களில் வித்தியாசமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்தியா முழுவதும் விழிப்பு நிலையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று புத்காம் பகுதியில் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். புல்வாமா சாலை சந்திப்பில் நேற்று இரவு 30 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.