செய்தி &
படங்கள்:
எம். கே. ருஷ்யேந்திரன்
"எனக்கே விளங்கவில்லை; எப்படித்தான் சொல்கிறேனோ எனக்கே தெரியவில்லை," என்கிறார், சன்னியாசியாக வாழும் ஒரு சம்சாரி.
மகேந்திரன் என்ற அந்த 43 வயது ஆடவரை கட்டளைச்சேரி என்ற கிராமவாசிகளும் அந்த வட்டாரவாசிகளும் 'குறி சொல்லும் சாமி' என்று குறிப்பிடுகிறார்கள்.
சுற்றிலும் பச்சைப்பசேல் வயல்களுக்கு நடுவே செல்லும் ஒரு தார்ச் சாலையின் வளைவு ஒன்றில் வழிபாட்டு இடம்போல காட்சி அளிக்கும் ஓர் இடத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவரைப் பார்க்கலாம்.
திருட்டுப்போன பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று, குடும்பப் பிரச்சினை தீர வேண்டும் என்று, எந்தத் திசையில் தங்களுக்கு வளமான வாழ்க்கை இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பும் பலரும் அந்தக் கிழமைகளில் அவரைப் பார்க்க வருகிறார்களாம்.
"அப்படி வருவோரை கையைப் பார்த்து, அவர்கள் கொண்டு வரும் ஏதாவது ஆவணங்களை வைத்து அல்லது அவர்களிடம் விவரம் கேட்டு அவற்றின் அடிப்படையில் மகேந்திரன் பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கூறுகிறார்.
"அவற்றில் கிட்டத்தட்ட எல்லாம் பலிக்கின்றன,'' என்று கட்டளைச் சேரி கிராமத் தலைவரான ஜே. டி. பாண்டியராஜ் கூறுகிறார்.
"இந்தச் சாலை வளைவில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் வயல்களுக்கு நடுவே இருக்கும் ஐயனார் கோயில்தான் எங்களுக்கு கண்கண்ட தெய்வம்.
"என்னுடைய தாத்தா, பிறகு என் தந்தை சீமான், அவருக்குப் பிறகு நான் என்று ஒருவர் பின் ஒருவராக, தலைமுறை தலைமுறையாக ஐயனாரின் அருளுக்கு பாத்தியதையாகி வருகிறோம்.
"நான் ருத்ராட்ச மாலையை அணிந்துகொண்டு இங்கு வந்து அமர்ந்துவிட்டால் என்னையே மறந்து விடுகிறேன். ஏதோ ஒரு சக்தி என்னை ஆட்கொண்டதைப் போல நான் உணர்கிறேன்.
"அப்போது யார் என்னிடம் எதைக் கேட்டாலும் நான் தக்க பதில் சொல்கிறேன். ஆனால் நான் என்ன சொன்னேன் என்பது பிறகு எனக்கே நினைவிருக்காது," என்கிறார் குறி சொல்லும் மகேந்திரன்.
திரு மகேந்திரன் திருமணம் ஆனவர். 22 வயதில் ஒரு மகன். அவர் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போய்விட்டார். மூன்று ஆண்டு களுக்கு முன் தன் தந்தை மரணம் அடைந்ததற்குப் பிறகு அவரிடம் இருந்து ஐயனார் அருள் தனக்கு வந்துவிட்டதாகவும் அது முதல் சுத்தமாக தான் மாறிவிட்டதாகவும் கூறுகிறார் மகேந்திரன்.
மனைவியுடன் குடும்ப வாழ்க்கை நடத்தினாலும் இல்லற வாழ்வில் இப்போதெல்லாம் ஈடுபடுவதே இல்லை என்றும் சுத்த சைவமாக மாறிவிட்டதாகவும் கூறும் மகேந் திரன், அப்போதைக்கு அப்போது தனக்கு அருகே உள்ள ஐயனார் சிலையைப் பார்த்துக்கொள்கிறார்.
இதனிடையே, உள்ளபடியே மகேந்திரனை ஏதோ ஒரு சக்தி வழிநடத்துகிறது என்று கூறிய கிராமத் தலைவர் பாண்டியராஜ், ஒரு நடைமுறையை விளக்கினார்.
"அதாவது, மகேந்திரனிடம் குறி பார்க்க வருபவர்கள் காணிக்கையாக பணம் கொடுப்பார்கள், அல்லது ஐயனாருக்கு காணிக்கையாக சேவலைக் கொடுப்பார்கள்.
"மகேந்திரன், அதோ தெரியும் ஐயனார் கோயிலுக்குச் சென்று அந்தச் சேவலை அங்கு விட்டுவிட்டு வந்துவிடுவார். சேவலுக்கு ஐந்து நாள்களுக்குத் தேவையான உணவையும் அங்கு வைத்துவிட்டு வருவார்.
"ஐந்து நாள்களுக்குப் பிறகுதான் அந்தக் கோயிலுக்குச் சேவ லைத் தேடி அவர் செல்ல வேண்டும் என்பது ஐயனார் கட்டுப்பாடு.
"சேவல் உயிரோடு இருந்தால் அது மகேந்திரனுக்குச் சொந்தம். அதை அவருடைய குடும்பத்தினர் சமைத்து சாப்பிடுவார்கள். அவர் தொடமாட்டார். ஆனால் அந்தச் சேவல் அவர் குடும்பத்துக்கும் பெரும்பாலும் கிடைக்காது.
"சேவலைத் தின்பதற்காக நாய்கள், நரிகள், நல்லபாம்பு எல்லாம் ஐயனார் கோயிலைச் சுற்றி சுற்றி வரும். அவற்றுக்குப் பயந்து கொண்டு எப்போதுமே அங்கு உள்ள ஒரு புளியமரத்தின் உச்சியில் சேவல் உட்கார்ந்துகொள்ளும்.
"அரவமில்லாத நேரத்தில் கீழே வந்து சாப்பிட்டுவிட்டு மேலே ஏறிக்கொள்ளும். எவ்வளவு தந்திரமாக நடந்துகொண்டாலும் கடைசியில் சேவல் தோற்றுத்தான் போகும்.
"எப்படியோ அது நாய்க்கோ பாம்புக்கோ நரிக்கோ இரையாகிவிடும். ஐந்து நாள் கழித்து போய் வரும்போது மகேந்திரன் வெறும் கையோடுதான் திரும்புவார்," என்று கிராமத் தலைவர் விளக்கினார்.
ஐயனார் கோயிலுக்குப் போக முயற்சி செய்தேன். அதற்குப் பாதை கிடையாது. அகலம் குறைந்த வரப்பு ஒன்றின் வழியாக அரை கி.மீ. நடந்து செல்ல வேண்டும்.
"ஊர் மக்கள், பெண்கள் யாரும் அங்கு செல்வது கிடையாது. எப்போ தாவது படையல் போடும்போது மட்டும் ஆண்கள் சிலர் செல்வது உண்டு. அதுவும் சிரமம் என்று பலரும் வரமாட்டார்கள்.
"உங்களால் செல்ல முடியாது," என்று அந்த ஊர் பெரியவரே என்னிடம் கூறிவிட்டார். ஆகையால், நான் அங்கு செல்லவில்லை.
"குறி சொல்வது என்பது ஒரு கலை. அதை நம்புவோரும் இருக்கிறார்கள் நம்பாதவர்களும் இருக்கிறார்கள். எங்கள் ஊர் மகேந்திரனைப் பொறுத்தவரை, அவர் எப்படி சரியாகச் சொல்கிறார் என்பது எங்களுக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது," என்று திரு பாண்டியராஜ் கூறியதைக் கேட்ட மகேந்திரன் தானும் அதை ஆமோதிப்பதாக தலையாட்டினார்.
நீங்கள் குறி சொன்ன ஒரு சில சம்பவங்களைச் சொல்லுங்கள் என்று மகேந்திரனிடம் கேட்டேன்.
"பக்கத்தில் உள்ள பொன்னூர் என்ற கிராமத்தில் ஒரு மோதிரம் திருட்டுப் போய்விட்டது. அதற்குத் தீர்வு சொல்லும்படி சிலர் வந்து என்னிடம் கேட்டனர். ஐயனார் என்னை ஆக்கிரமித்த நிலையில் நான் குறி சொன்னேன்.
"சில நாள்களுக்குப் பிறகு திரும்பி வந்த அந்தக் குடும்பத்தினர், மோதிரம் கிடைத்துவிட்டது என்றும் நான் கூறியபடியே ஐந்து பேரைக் கண்காணித்து அவர்களில் திருடனான ஐந்தாவது நபரைப் பிடித்துவிட்டதாகவும் என்னிடம் கூறினார்கள்.
"பில்லி சூனியம் போன்ற வேலைக்கெல்லாம் நான் போகவேமாட்டேன். என் சக்தி எல்லாமே ஆக்ககரமான செயல்களுக்கே.
"உலக உயிரினங்கள் எல்லாம் வாழவே விரும்புகின்றன. ஆகை யால், எல்லா உயிர்களும் கூடுமானவரை அதிக நாள் வாழ உதவவேண்டும்.
"உங்களின் ஒவ்வொரு செயலையும் ஒருவர்-என்னைப் பொறுத்தவரை என் ஐயனார்- கண்காணிக்கிறார். நல்லதோ கெட்டதோ நீங்கள் செய்யும் காரியத்தில் இருந்து நீங்கள் தப்ப முடியாது," என்று மகேந்திரன் கூறியதைக் கேட்டபடி அவரிடமும் கிராமத் தலைவரிடமும் விடைபெற்று புறப்பட்டேன்.
அப்போது, இதுவரை குறி கேட்டிராத எனக்கு, மகேந்திரனிடம் ஏதாவது கேட்டுப் பார்ப்போமா என்ற எண்ணம் உதித்தது.
யார் யாருக்கோ குறி சொல் கிறாரே மகேந்திரன், அவர் அடுத்த தாக ஐயனார் கோயிலில் கொண்டு விட இருக்கும் சேவலின் கதி ஐந்து நாள்களுக்குப் பிறகு என்ன ஆகும் என்பதைப் பற்றி அவரிடம் குறி கேட்கலாம் என்று முடிவு செய்து திரும்பினேன். ஆனால் நான் போன நாள் புதன்கிழமை என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
அன்று அவர் குறி சொல்லமாட்டார் என்பதால் அடுத்த செவ்வாய் அன்று வரலாம் என வண்டியைக் கிளப்பினேன்.
சனிக்கிழமை ஒரு சாமானியர்
எல்லாரையும் போலவேதான் நானும் என்றாலும் சில வேளைகளில் என்னையே மறந்து, ஏதோ ஒரு நிலைக்குச் சென்று விடுகிறேன். ஒரு காரண காரியத்தை நான் சொன்னதாக மற்றவர்கள் சொல்கிறார்கள் என்கிறார் குறி சொல்லும் மகேந்திரன், 43.
ஐந்து நாள்கள் கழித்து சேவல் உயிரோடு இருந்தால் அது குறி சொல்லும் மகேந்திரன் குடும்பத்துக்குச் சொந்தம். ஆனால் அவ்வளவாக அது கைகூடுவதில்லை.

