புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், ராஜஸ்தான் உட்பட பாகிஸ்தானின் மேற்கு எல்லைப் பகுதி முழுவதும் தீவிரக் கண்காணிப்பு பணியை எல்லைப் பாதுகாப்புப் படை முடுக்கிவிட்டுள்ளது.
சுதந்திர தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், 'நாடே முதன்மை, எப்போதும் முதன்மை'' என்ற கருப்பொருளில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் 200 மில்லியன் மூவண்ணக் கொடிகள் ஏற்றுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், சுதந்திர தின விழா கொண்டாட்டத்தைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் பெரிய அளவில் சதிச் செயலில் ஈடுபடக்கூடும் என்பதால் நாட்டின் முக்கிய பகுதிகளிலும் விழாக் கொண்டாட்டப் பகுதிகளிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் தொடங்கியுள்ளனர். இந்த தீவிர கண்காணிப்புப் பணி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை தொடரும்.
இந்த நடவடிக்கையின்போது, தீவிரவாதிகளின் ஊடுருவலுக்குச் சாத்தியமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சந்தேகப்படும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பகுதியிலிருந்து தானியங்கி வானூர்திகள் அத்துமீறி நுழைவது அண்மைகாலமாக அதிகரித்துள்ளது. இவற்றைச் சுட்டு வீழ்த்துவதற்கு ராணுவம் ஆணை பிறப்பித்துள்ளது.
எல்லைப் பகுதியில் வாகனச் சுற்றுக்காவல் பணி, நடை காவல் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உள்ளூர்க் காவல்துறையினருடன் இணைந்து, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கை ராஜஸ்தான் மண்டல எல்லைப் பாதுகாப்புப் படை ஐஜி டேவிட் லால்ரிசங்கா மேற்பார்வையில் நடைபெறுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் சிறப்புரை ஆற்ற உள்ள நிலையில், செங்கோட்டையைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு தூரத்திற்கு பலூன்கள், பட்டம் மற்றும் தானியங்கி விமானங்கள் பறக்க அரசு தடை விதித்துள்ளது.

