விவகாரத்துக்கு முந்திய திருமண ஆலோசனைக்கு வந்த மனைவியின் கழுத்தை அறுத்த ஆடவர்

விவகாரத்துக்கு முந்திய திருமண ஆலோசனைக்கு வந்த மனைவியின் கழுத்தை அறுத்த ஆடவர்

1 mins read
5e462b49-0587-42ee-abcc-382b1b94fc0d
சிவக்குமார் சைத்திராவைக் கழுத்தை அறுத்துக் கொன்றார் என்று கூறப்பட்டது. படம்: இணையம் -

கர்நாடக மாநிலத்தில் விவாகரத்துக்கு முன்னரர் திருமண ஆலோசனைக்குச் சென்றுவிட்டு வெளியில் வந்த ஆடவர், தமது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.

அந்தப் பெண் இறந்ததை அடுத்து அவரது கணவர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சிவக்குமார், சைத்திராவுடனான ஆறாண்டுகால திருமண உறவை முறித்துக்கொள்ள விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.

அதன் தொடர்பில் ஹசான் மாவட்டத்தில் உள்ள ஹோலே நரசிபுர குடும்ப நீதிமன்றத்தில் இருவரும் திருமண ஆலோசனைக்குச் சென்றிருந்தனர்.

ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் வெளியில் வந்த சைத்திரா கழிவறைக்குச் சென்றபோது சிவக்குமார் அவரைப் பின்தொடர்ந்தார்.

அங்கு அவர் சைத்திராவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். தப்பிச் செல்ல முயன்ற சிவக்குமாரை வழிப்போக்கர்கள் தடுத்து வைத்தனர்.

சைத்திராவுக்கு செயற்கை சுவாச உதவி அளிக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டார் என்று அங்கு தெரிவிக்கப்பட்டது.

அவரது ரத்த நாளங்கள் துண்டிக்கப்பட்டதாகவும் கழுத்து அறுக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.

சிவக்குமார் எப்படி நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதத்தை மறைத்து எடுத்து வந்தார் என்று அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

சிவக்குமாருக்கும் சைத்திராவுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிரிந்து வாழ்ந்த சைத்திராவுக்கு சிவக்குமார் கடந்தகாலத்தில் தொல்லை தந்தார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.