சுதந்திர தினம்: லட்சக்கணக்கானோர் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர்
புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய நினைவிடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள், கோவில்கள் போன்ற பொது இடங்களிலும் வழக்கத்தைவிட அதிகமானோர் காணப்பட்டனர்.
மேலும் 75ஆவது சுதந்திர தினம் என்பதால் பொது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அனைத்து மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
தனியார் நிறுவனங்கள், பொது நல அமைப்புகள் சார்பாக சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், மூன்று நாள்கள் தொடர் விடுமுறை என்பதாலும், பாரம்பரிய நினைவிடங்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதாலும் மக்களிடம் கூடுதல் உற்சாகம் நிலவியது. அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
முன்னதாக இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியமிக்க நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 முதல் 15ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவா் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை வெளியிடுவதாக மத்திய கலாசார அமைச்சு தெரிவித்தது.
தாஜ்மகால் உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள், பாரம்பரிய நினைவிடங்களில் ஏராளமானோர் குவிந்ததால் காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை.