கர்நாடக சட்டப்பேரவை கட்டடம் முன்பு தேசியக்கொடியை ஏந்தி சுதந்திர தினத்தை கொண்டாடிய பெண்கள். படம்: இபிஏ
பெங்களூரு: இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழா அனைத்து மாநிலங்களிலும் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர தின விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
கொண்டாட்டத்தை ஒட்டி பெங்களூரு மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆந்திரா
விஜயவாடாவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது, குறிப்பிட்ட சில சமூகத்தினர் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அதன் பலன்களை அனுபவிக்க முடியவில்லை எனக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
"இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு, பிரச்சினைகளைக் களைவதற்கு அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஆந்திர அரசு அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் விரைவில் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது உரையாற்றிய அவர், அம்மாநிலத்தில் உள்ள சாமானியர்களின் நலனுக்காக தமது அரசு பாடுபடும் என்றார்.
கேரளா
அண்டை மாநிலமான கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியபோது கூட்டாட்சி, மதச்சார்பின்மை ஆகியவற்றுக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள மதிப்பை உணர்ந்து அனை வரும் செயல்பட வேண்டும் என்றார்.
சமத்துவம், சுதந்திரம் ஆகியவைதான் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளாக இருந்தன என்றார் அவர்.

