செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f8a9ebd9-24c2-48c5-bcd4-df70995309c0
-

ஒரே நாளில் இருநூறு திருமணங்கள்

திருவனந்தபுரம்: எதிர்வரும் 21ஆம் தேதியன்று குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொள்ள இருநூறு ஜோடிகள் முன்பதிவு செய்துள்ளனர். அன்றைய தினம் ஞாயிற்று கிழமை என்பதாலும் கிருஷ்ண ஜெயந்திக்குப் பிறகு வரும் சில நாள்களில் திருமணம் செய்து கொள்வது நல்லது என்று கருதுவதாலும் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகத் தரப்பு தெரிவித்துள்ளது. ஒரு கட்டத்தில் முன்பதிவை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைக்க, கேரள உயர் நீதிமன்றம் தலையிட்டு, அனைத்து முன்பதிவுகளையும் ஏற்க வேண்டும் என்றும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

வாட்ஸ்அப் மூலம் பெண் கவுன்சிலருக்கு தொல்லை; மாநகராட்சி அதிகாரி கைது

மும்பை: வாட்ஸ்அப் செயலி மூலம் மும்பை பெண் கவுன்சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி அதிகாரிக்கு நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நாற்பது வயதான அந்தப் பெண் கவுன்சிலருக்கு நள்ளிரவு வேளையில் ஆபாச புகைப்படம் ஒன்றை அனுப்பியதுடன், தூங்கிவிட்டாயா, நாளை சந்திக்கலாமா என்பன போன்ற பல குறுந்தகவல்களையும் அனுப்பியுள்ளார் அந்த அதிகாரி. இது தொடர்பாக பெண் கவுன்சிலர் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையிடம் அந்த அதிகாரி சிக்கினார்.

கூகல் வெளியிட்ட சிறப்புச் சித்திரம்

புதுடெல்லி: இந்திய சுதந்திர தினத்தையொட்டி கூகல் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்டது. கேரளாவைச் சேர்ந்த நீதி என்பவர் அச்சித்திரத்தை வடிவமைத்துள்ளார். இந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அச்சித்திரம் அமைந்துள்ளதாகப் பலரும் தெரிவித்துள்ளனர்.

உலக அளவிலான முக்கிய நிகழ்வுகளின்போது இதுபோன்ற சித்திரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது கூகல் நிறுவனம்.