மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி படுகொலை: பாலக்காட்டில் பதற்றம்
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூா் நிா்வாகியான ஷாஜஹான் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு குன்னங்காடு பகுதியில் வசித்து வந்த ஷாஜஹான் மலம்புழை என்ற இடத்தில் வைத்து எட்டு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டார். அந்தக் கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் ஷாஜகான் படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றன் மீது ஒன்று குற்றம்சாட்டி வருகின்றன.
நேதாஜி அஸ்தி: மகள் கோரிக்கை
புதுடெல்லி: ஜப்பானில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என அவரது மகள் அனிதா போஸ் வலியுறுத்தி உள்ளார். நேதாஜியின் ஒரே வாரிசான அவர் ஜெர்மனியில் வசித்து வருகிறார். "சுதந்திரத்தின் மகிழ்ச்சியை அனுப்பவிப்பதற்கு எனது தந்தை வாழவில்லை. குறைந்தபட்சம் அவரது அஸ்தியையாவது இந்திய மண்ணுக்குக் கொண்டு வரவேண்டிய தருணம் இதுவாகும். அந்நிய ஆட்சி இல்லாத இந்தியாவில் வாழ்வதற்காகத்தான் அவர் ஏங்கினார். இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் அவரது அஸ்தி இந்தியாவில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்," என்று அனிதா போஸ் மேலும் கூறியுள்ளார்.
திருப்பதி கோவிலில் அமைச்சர் அத்துமீறல்: பக்தர்கள் கோபம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கடந்த சில தினங்களாக சாமி தரிசனத்துக்காகக் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில், அம்மாநிலத்தின் பெண்கள், சிறார்கள் நலத்துறை அமைச்சர் உஷாஸ்ரீ சரண் நேற்று முன்தினம் அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்துகொள்ள தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு வந்தார். பின்னர் முக்கிய பிரமுகர்களுக்காக உள்ள தனி வழியில் சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் 50 பேரும் அவருடனேயே சென்று சாமி தரிசனம் செய்ததாகப் புகார் எழுந்துள்ளன. முன்னதாக வரும் 21ஆம் தேதி வரை முக்கியப் பிரமுகர்களுக்கான தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அமைச்சர் மட்டும் எவ்வாறு அனுமதிக்கப்பட் டார் என பக்தர்கள் கோபத்துடன் கேட்டு வருகின்றனர்.
மாநில சுகாதார அமைச்சர்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்
புதுடெல்லி: மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா வலியுறுத்தி உள்ளார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் நேற்று கலந்துரையாடிய அவர், மத்திய அரசு வழங்கும் நிதியை உரிய நேரத்தில் மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சுகாதார செயல்பாடுகளில் மாநிலங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு மாநில அமைச்சர்களுக்கு மன்சுக் மாண்டவ்யா அழைப்பு விடுத்தார்.

