அகமதாபாத்: குஜராத் கலவரத்தின்போது ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வரும் 11 குற்றவாளிகளை குஜராத் மாநில அரசு முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது.
இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற இஸ்லாமியப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
அப்போது அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். மேலும் அவரது குடும்பத்தார் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
கொடூரத்தின் உச்சமாக பானுவின் கண்முன்னே அவரது மூன்று வயது மகள் கொல்லப்பட்டார். இச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக பதினோரு பேர் கைது செய்யப்பட்டு, வழக்கும் பதிவானது.
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை நீதிமன்றம் 11 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து, ஆயுள் தண்டனையும் விதித்தது.
இந்நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் குற்றவாளிகளில் ஒருவர், தாம் முன்னதாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இதுகுறித்து குஜராத் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மாநில அரசு சிறப்புக் குழு ஒன்றை அமைத்தது. சில மாதங்களுக்குப் பிறகு 11 பேரையும் விடுதலை செய்யலாம் என அந்தக் குழு பரிந்துரைத்தது என்றும் அது மாநில அரசிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் சம்பவம் நிகழ்ந்த பஞ்ச்மால் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பானு பில்கிஸ் குடும்பத்தில் அவர் மட்டுமே எப்படியோ தப்பிப் பிழைத்தார்.
அதன் பிறகும்கூட அவருக்குப் பல்வேறு மிரட்டல்கள் வந்ததாகவும் அவருக்கு பக்கபலமாக உள்ள ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் பரபரப்புத் தகவல்கள் வெளிவந்தன.
உச்ச நீதிமன்றம் பானுவின் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்து நேரடியாகக் கண்காணித்ததை அடுத்து குற்றவாளிகளை அடையாளம் காட்டியதுடன் தொடர்ந்து நீதிக்காகப் போராடி வந்தார் பானு.
இந்நிலையில், தண்டனை பெற்ற 11 பேரையும் தண்டனைக்காலம் முடிவதற்கு முன்பே விடுவித்து இருப்பதை ஏற்க இயலாது என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

