பாட்னா: பீகார் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
நேற்று 31 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். அம்மாநில ஆளுநர் சௌகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
31 அமைச்சர்களில் 16 பேர் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்எல்ஏக்கள் 11 பேருக்கும் காங்கிரஸ் கட்சியில் இருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கும் சுயேச்சை எம்எல்ஏவுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கான துறை விவரங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. அது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் விவரங்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ள வேளையில், அமைச்சரவையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

