பெங்களூரு: சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தொடர்பாக கர்நாடக அரசு ஊடகங்களில் வெளியிட்ட விளம்பரத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.
அந்த விளம்பரங்களில் நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் படம் இடம்பெறவில்லை. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பாஜகவினர் வைத்த பதாகைகள் பல கிழித்தெறியப்பட்டன.
அக்குறிப்பிட்ட விளம்பரத்தில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், வல்லபாய் பட்டேல், அம்பேத்கர், பகத் சிங், சாவர்க்கர் உள்ளிட்டோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. நேரு படம் காணப்படவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களின் உன்னதமான தியாகங்களை அவமதிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்படக் கூடாது என்றார்.
இதையடுத்து கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் வைத்திருந்த பதாகைகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டன.
குறிப்பாக, சுதந்திர தினத்தையொட்டி சாவர்க்கர் படத்துடன் வைக்கப்பட்ட பதாகைகள் கிழித்தெறியப்பட்டன. இதற்குப் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பதற்றம் ஏற்பட்டது.
மேலும் பஜ்ரங் தளம் அமைப்பினரும் போராட்டத்தில் குதித்ததால் ஷிமோகா, மங்களூரு உள்ளிட்ட பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் திப்பு சுல்தானின் படத்துடன் இஸ்லாமியர்கள் வைத்த சுதந்திர தின வாழ்த்து பதாகைகளும் அடையாளம் தெரியாத சிலரால் கிழித்தெறியப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையே கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சில பதாகைகளும் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிட்ட சில பதாகைகளை அகற்றக் கோரி இஸ்லாமிய இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்தே சிமோகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது என்றும் கர்நாடக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

