ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
புதுடெல்லி: இந்திய மக்களுக்கு குறைவான விலையில் பெட்ரோல் விற்கப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டுதான் ரஷ்யாவிடம் இருந்து மத்திய அரசு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணெய் இறக்குமதியில் இந்தியா ஆதாயம் அடையும் வகையில் செயல்படுவது தமது தார்மீகக் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததை அடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இந்நிலையில், அந்நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து இந்திய அரசு கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. நாளுக்குநாள் இந்த இறக்குமதி அளவு அதிகரித்த வண்ணம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா தீவிரம் காட்டி வருவது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
ஒவ்வொரு நாடும் எரிபொருள் விலையை சமாளிக்க ஏதேனும் நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் இந்தியாவும் அதைத்தான் செய்கிறது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எண்ணெய், எரிவாயு விலை அதிகரித்துள்ளது. பாரம்பரியமாக எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள் பலவும் ஐரோப்பிய சந்தைகளில் கவனத்தைத் திருப்பியுள்ளன. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளை ஐரோப்பிய நாடுகள் நம்பத் தொடங்கி உள்ளன.
"இதுபோன்ற சூழலில் ஒவ்வொரு நாடும் தனக்கான சிறந்த சந்தையை உறுதிப்படுத்த முயலும். ஆனால் நமது அணுகுமுறை சற்று வித்தியாசமானது.
"நாம் பாதுகாப்பு நடவடிக்கையாக இதனைச் செய்யாமல் நமது விருப்பங்களை முன்வைத்ததில் வெளிப்படையாக, நேர்மையாக இருக்கிறோம்," என்று ஜெய்சங்கர் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதனால் இவ்விவகாரத்தில் தொடக்கத்தில் இந்தியாவை எதிர்த்த நாடுகளும்கூட மத்திய அரசின் நோக்கத்தைப் புரிந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எந்தவொரு அரசுக்கும் மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.
"இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஒரு மாதம் முழுவதும் வாங்கும் எண்ணெய்யின் அளவு ஐரோப்பிய நாடுகள் ஒரு மதிய வேளையில் கொள்முதல் செய்யும் அளவை ஒத்தது. இந்தியா தற்போதைய நிலவரப்படி மாதம் 950,000 பேரல் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது," என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.
இதற்கிடையே, ரஷ்யாவிடம் இருந்து பெற்ற கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்ட எரிபொருள் இந்திய கப்பல் மூலம் நியூயார்க் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் வந்த கப்பல் ஆழ்கடலில் நிறுத்தப்பட்டது என்றும் பின்னர் அதில் இருந்த கச்சா எண்ணெய் மொத்தமாக இந்தியக் கப்பல் ஒன்றுக்கு மாற்றப்பட்டதாகவும் அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து அந்தக் கச்சா எண்ணெய் குஜராத்தில் உள்ள துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் நியூயார்க்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.

