ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சித் தலைமை அளித்த பொறுப்பில் இருந்து சில மணி நேரங்களில் விலகி உள்ளார்.
இதன் மூலம் காங்கிரசில் நிலவும் உட்கட்சிப் பூசல் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அக்கட்சியின் ஜம்மு, காஷ்மீருக்கான பிரசாரக் குழுவின் புதிய தலைவராக குலாம் நபி ஆசாத் அறிவிக்கப்பட்டார். அவர் முன்பு காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அரசாங்கத்திலும் கட்சியிலும் வகித்த அனுபவம் உள்ளவர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமைத்துவத்துக்கு எதிராக அதன் மூத்த தலைவர்கள் 23 பேர் போர்க்கொடி உயர்த்தினர். அவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர்.
இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்த கட்சித் தலைமை பல வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டும் பலனில்லை.
இந்நிலையில் குலாம் நபிக்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவரோ, அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் பிரசாரக் குழு தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனால் காங்கிரஸ் வட்டாரங்களில் சலசலப்பு நிலவுகிறது.

