செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
88176c75-36af-4dc4-a0e1-d2d81ee8f07d
-

மத்திய அமைச்சர்: தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்படும்

புதுடெல்லி: புதிய இந்தியாவுக்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான கருத்துக் கேட்பில் பங்கேற்குமாறு பொது மக்களுக்கு மத்திய கல்வி, திறன்மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை 2020க்கு ஏற்ப தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் ஆற்றல்மிக்க மேம்பட்ட இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை அடைவதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "தேசிய பாடத் திட்டம் குறித்து பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம். 23 மொழிகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகள் குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்," என்றார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

உலக அளவில் தலைசிறந்த ஆறு நகரங்களில் இடம்பெற்றது பெங்களூரு

பெங்களூரு: உலகின் ஆறு சிறந்த நகரங்களுக்கான பட்டியலில் கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக பெங்களூரு திகழ்கிறது என்று புளும்பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பப் பூங்காக்களை கணக்கீடு செய்யும் பணியை ஒட்டி, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சடலமாக மீட்பு

ஸ்ரீநகர்: ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அங்குள்ள ஸித்ரா என்ற பகுதியில் உள்ள இரு வீடுகளில் இருந்து ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. ஆறு பேரும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ள தாகத் தெரிய வந்துள்ளதாக ஜம்மு மாவட்டக் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். இதன் பின்னணி குறித்து தனிப்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவில் ஆக நீளமான சரக்கு ரயிலின் சோதனையோட்டம் வெற்றி

புதுடெல்லி: 75வது சுதந்திர தினத்தையொட்டி, 'சூப்பா் வாசுகி' என்ற சரக்கு ரயிலின் சோதனையோட்டம் நடைபெற்றது. இதுதான் நாட்டிலேயே நீளமான, அதிக சரக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லக்கூடிய ரயில் என்றும் இது சுமார் 3.5 கிலோ மீட்டர் நீளம் உள்ளது என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 295 சரக்குப் பெட்டிகளில் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு, சட்டீஸ்கா் மாநிலம், கோா்பாவில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் நாகபுரிக்கு இந்த ரயில் சென்றது.