புதுடெல்லி: உலகளவில் பயன்படுத்தப்படுகிற தடுப்பூசிகளில் 60% தடுப்பூசிகளை விநியோகிப்பது இந்தியாதான் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறினார்.
மத்திய செலவினத் துறையின் கூடுதல் செயலாளர் சஜ்ஜன் சிங் யாதவ் 'இந்தியாவின் தடுப்பூசிகள் வளர்ச்சி கதை' என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். டெல்லியில் அந்தப் புத்தகத்தை வெளியிட்டு அமைச்சர் பேசினார்.
உலகளவில் பல பத்தாண்டுகளில் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா தனி ஒரு நாடாக சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளதாக அவர் கூறினார்.
இந்தியாவில் தயாரிக்கப்படுகிற தடுப்பூசி, ஒட்டுமொத்த உலகுக்கும் விநியோகிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பொது முடக்கக் காலத்திலும்கூட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை இந்தியா உற்பத்தி செய்ததாகக் கூறினார்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு எதிராக 208 கோடியே 57 லட்சம் முறை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

