பாட்னா: பீகார் அமைச்சர்களில் 72 விழுக்காட்டினர் மீது கடும் குற்ற வழக்குகள் இருப்பதாக 'ஜனநாயக சீர்திருத்தச் சங்கம்' என்ற தேர்தல் உரிமை அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பீகாரின் முதல்வர் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் புதிய அரசை அமைத்துள்ளார்.
நிதீஷ் குமார் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மாநிலத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
புதிய கூட்டணி அரசில் 33 அமைச்சர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ளது.
மொத்தமுள்ள 33 அமைச்சர்களில் 23 அமைச்சர்கள் அதாவது 72% குற்ற வழக்குப் பின்னணி கொண்டவர்கள். அவர்களில் 53% அல்லது 17 அமைச்சர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. 2020 தேர்தலில் தாக்கலான வேட்புமனு பிரமாணப் பத்திரங்கள் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

