செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6f35e965-e119-438e-8a16-768e15579358
-

ஒடிசா: 5 லட்சம் பேர் பாதிப்பு

புவனேஷ்வர்: ஒடிசாவில் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வடகடலோர 10 மாவட்டங்களில் உள்ள 1,757 கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா: புதிதாக 72 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருக்கிறது. சில நாட்களாக உயர்ந்து வந்த அன்றாட பாதிப்பு புதன்கிழமை சற்று குறைந்தது. ஆனால் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அது 12,608 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 72 பேர் மாண்டுவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான இணையத்தளம்

புதுடெல்லி: இந்தியாவில் முதல் முறையாக போதை கடத்தலில் கைதான குற்றவாளிகள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் புதிய இணையத்தளத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மத்திய, மாநில மற்றும் பல விசாரணை அமைப்புகளின் பயன்பாட்டுக்காக 'நிதன்' என்ற அந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் போதைப்பொருள் கடத்தலில் கைதான குற்றவாளிகளின் விவரங்கள் உள்ளிட்ட பலவும் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிரம்ப் வருகை: ரூ.38 லட்சம் செலவு

புதுடெல்லி: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அவருடைய மனைவியும் 2020 பிப்ரவரி 25ஆம் தேதி புதுடெல்லி வந்தனர். அந்த 36 மணி நேர அரசாங்க வருகைக்கு இந்திய அரசு ஏறத்தாழ ரூ.38 லட்சம் செலவழித்ததாக மத்திய தகவல் ஆணையத்திடம் வெளியுறவு அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

பஞ்சாப்பில் விமான அருங்காட்சியம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா விமான நிலையம் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் 20ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. விமானப் போக்குவரத்துத் துறையில் நூற்றாண்டு வரலாற்றுடன் செயல்படும் பாட்டியாலா விமான நிலையத்தை பற்றி வருங்கால தலைமுறை அறியும் வகையில் அங்கு விமான அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் பகவந்த் மான் ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநிலத்தின் விமானப் போக்குவரத்துத் துறையின் வரலாறு, கலைப்பொருள்கள், விமானங்களின் புகைப் படங்கள், வரைபடங்கள், மாதிரிகள், விமானிகளின் ஆடைகள், சாதனங்கள், தொழில்நுட்பக் கையேடுகள், ஆவணங்கள் இருக்க வேண்டும் என்றார் அவர்.