அகமதாபாத்: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும் பிராமணர்கள் என்றும் நல்ல பழக்கவழக்கங்கள் உடையவர்கள் என்றும் பாஜக எம்எல்ஏ ராகுல்ஜி என்பவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் கலவரத்தின்போது கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 11 பேரையும் குஜராத் அரசு அண்மையில் விடுதலை செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் குஜராத் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
11 பேருக்கும் சிறை வாசலில் ஆரத்தி எடுத்து, இனிப்பு வழங்கி அவர்களது குடும்பத்தார் வரவேற்றனர்.
இந்நிலையில், தவறான நோக்கத்தின் அடிப்படையில் 11 பேரும் தண்டிக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்எல்ஏ ராகுல்ஜி தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
"பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்களை ஆதரிப்பது என்பது பாஜகவின் அற்ப மனநிலையை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற அரசியலில் ஈடுபட வெட்கமாக இல்லையா," என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாகவும் அக்கட்சியின் குற்றவாளிகளை ஆதரிப்பது புதிதல்ல என்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி விமர்சித்துள்ளது.
இதே போல் திரிணாமூல் காங்கிரசும் இந்த விவகாரத்தில் பாஜக தலைமையைக் கடுமையாகச் சாடிஉள்ளது.