புதுடெல்லி: போர்ச் சூழலுக்கு மத்தியில் அடுத்த மாதம் முதல் நேரடி வகுப்புகளைத் தொடங்குவது என உக்ரேனில் உள்ள கல்வி நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் கவலையில் மூழ்கி உள்ளனர். மீண்டும் அங்கு செல்லும் பட்சத்தில், தங்களுக்கான பாதுகாப்பு கிடைக்குமா எனும் அச்சம் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.
உக்ரேன், ரஷ்யா போர் காரணமாக சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பிவிட்டனர். தற்போது அவர்களுக்கு உக்ரேன் கல்வி நிறுவனங்கள் இணையம் வழி வகுப்புகள் நடத்தி வருகின்றன.
நாடு திரும்பிய மாணவர்களால் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் உக்ரேனில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாணவர்களுக்கு அங்குள்ள கல்வி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
உக்ரேனில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், அங்கு செல்ல அச்சமாக உள்ளது என மாணவர்களில் பலர் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், அங்கு செல்லாவிட்டால் தங்கள் கல்வி வீணாகிவிடும் என்ற கவலையும் மாணவர்களுக்கு உள்ளது.

