லக்னோ: இரு துறவிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள நரசிங்கர் கோவில் மடத்துக்கு இரு துறவிகளும் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதல் கலவரத்தில் முடிந்ததை அடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தி நகரின் ராய்கஞ்ச் பகுதியில் பழமைவாய்ந்த நரசிங்கர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான மடத்தின் தலைவராக ராம் சரண் தாஸ் பொறுப்பில் உள்ளார்.
இவருக்கும் அக்கோவிலில் பூசைகளுக்குப் பொறுப்பேற்றுள்ள மற்றொரு துறவியான ராம் சங்கர் தாசுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ராம் சங்கர் மடத்தை விட்டு வெளியேற வேண்டும் என ராம் சரண் உத்தரவிட, ராம் சங்கரும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இக்கோவிலில் திடீரென குண்டு வெடித்த சத்தம் கேட்டது.
இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், இரு துறவிகளின் ஆதரவாளர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் தலையீட்டுக்குப் பிறகு கோவிலிலும் மடத்திலும் அமைதி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

