செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c6fe571a-5e8a-4821-9267-514d96f0b742
-

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆடவருக்கு 20 ஆண்டு சிறை

நெல்லை: பதிமூன்று வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆடவருக்கு போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த, 41 வயதான சண்முகவேல்ராஜ் என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு நெல்லையில் தங்குவிடுதி ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது அதே விடுதியில் இருந்த 13 வயதுச் சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் கைதானார். இதுதொடர்பான வழக்கு நெல்லை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சண்முகவேல்ராஜுவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தோழிகளை பாலியல் தொழிலில் ஈடுபடத் தூண்டிய கல்லூரி மாணவி

திருப்பூர்: உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, தன்னுடன் படித்த தோழிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற கல்லூரி மாணவியால் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பகுதியில் உள்ள கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது. அக்கல் லூரியில் படிக்கும் இரு மாணவிகளுக்கு அண்மையில் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய ஒருவர், அம்மாணவிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என தூண்டிவிட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் விவரம் தெரிவித்ததை அடுத்து, விசாரணை தொடங்கியது. இதில் அக்கல்லூரியைச் சேர்ந்த ரம்யா என்ற மாணவிதான் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள முகவரிடம் தனது தோழிகளின் புகைப்படங்களையும் கைபேசி எண்களையும் கொடுத்தார் எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் காவல்துறையில் உடனடியாகப் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

25 இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.11 கோடி மதிப்புள்ள நாணயங்கள் கடந்த ஆண்டு மாயமானது. இதில் அவ்வங்கியில் பணியாற்றிய 15 முன்னாள் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 25 இடங்களில் வசித்து வரும் முன்னாள் வங்கி அதிகாரி களின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இச்சோதனை நடவடிக்கை நேற்றும் நீடித்ததாகவும் இவ்வழக்கில் சிலர் கைதாக வாய்ப்புள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.