புதுடெல்லி: நாட்டில் போதிய அளவில் கோதுமை கையிருப்பில் இருப்பதாகவும் வெளிநாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் ஏதுமில்லை என்றும் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி கோதுமையை இறக்குமதி செய்யத் திட்டமிடுவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்ட நிலையில், அரசாங்கம் நேற்று இதுகுறித்துத் தெளிவுபடுத்தியது.
முன்னதாக சென்ற வெள்ளிக்கிழமை ஒரு டன் கோதுமையின் விலை 24,453 ரூபாய்க்கு ஏறியது. இது கிட்டத்தட்ட 430 வெள்ளிக்குச் சமம்.
கடந்த மே மாதம் மத்திய அரசாங்கம் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்தபிறகு உள்நாட்டில் கோதுமை விலை சற்றுக் குறைந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இது 16 விழுக்காடு அதிகம்.
இந்த விலை ஏற்றத்தையடுத்து கோதுமை இறக்குமதி செய்யப்படக்கூடும் என்ற ஊகங்கள் பரவலாக எழுந்தன. கோதுமை கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததால், மத்திய அரசு கோதுமையை இறக்குமதி செய்யவிருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
இதனையடுத்து, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யுமளவிற்கு கோதுமை கையிருப்பு உள்ளதாக மத்திய உணவு, பொது விநியோகத் துறை நேற்று டுவிட்டரில் தகவல் வெளியிட்டது. பொது விநியோகத்திற்குத் தேவையான அளவு இந்திய உணவுக் கழகத்திடம் கோதுமை இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
முன்னதாக, உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்ததையடுத்து கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, "உலக நாடுகள் அனைத்திற்கும் கோதுமையை விநியோகிக்க இந்தியா தயாராக இருக்கிறது," என்று கூறியிருந்தார்.
ஆனால் அதற்கு முன்பே, நாடு முழுவதும் பரவிய வெப்ப அலையால் கோதுமை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் விலையும் ஏறியது. கோதுமையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தற்போது 40 விழுக்காட்டு வரியை விதித்துள்ளது.
இது நீக்கப்பட்டால்தான் இறக்குமதி எளிதாகும்.

