செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
699a5a89-4f0d-4ce1-be02-c43b32d8f363
-

சண்டிகர் விமான நிலையத்திற்கு

பகத் சிங்கின் பெயரைச் சூட்ட முடிவு

சண்டிகர்: சண்டிகர் நகரில் உள்ள அனைத்துலக விமான நிலையத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயரைச் சூட்ட பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளன. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டுவிட்டரில் இந்தத் தகவலைப் பதிவிட்டுள்ளார்.

ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவுடனான சந்திப்பில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்ளாதேஷ் பிரதமரின் வருகை

புதுடெல்லி: பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அடுத்த மாதம் ஐந்தாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு புதுடெல்லி செல்கிறார். கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிறகு அவர் இந்தியா செல்வது இதுவே முதல்முறை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுவார். இருதரப்பு வர்த்தக, தற்காப்பு உறவுகளைக் குறித்து அவர் பேச்சு நடத்துவார். டாக்கா திரும்பும் முன்னர் பங்ளாதேஷ் பிரதமர், ஜெய்ப்பூர், அஜ்மீர் தர்கா ஆகியவற்றுக்குச் செல்வார் என்று கூறப்பட்டது.

ஒரே வாரத்தில் 450 தேசியக் கொடிகள் தைத்த 91 வயது முதியவர்

பாட்னா: பீகாரைச் சேர்ந்த லால்மோகன் பஸ்வான் ஒரு தையல்காரர். காந்தியவாதியான இவருக்கு வயது 91.

'ஹெல்ப் ஏஜ் இந்தியா' எனும் தொண்டு நிறுவனம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி ஒரு வாரத்தில் 450 தேசியக் கொடிகளைத் தைத்துத் தர முடியுமா என்று பஸ்வானிடம் கேட்டது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைத்து இந்தப் பணியை வெற்றிகரமாக முடித்தார் இவர்.

வெள்ள நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

திருப்பதி: ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கனத்த மழை பெய்ததில் கிருஷ்ணா, கோதாவரி ஆகிய ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது.

சுற்று வட்டார கிராமங்கள் நீரில் மூழ்கியதையடுத்து தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டனர்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் மழை வெள்ளத்தால் பெரும் சேதத்தைச் சந்தித்த விவசாயிகள் மீண்டும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பாய்மரக் கப்பலில் சாகசப் பயணம்்

கோவா: இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான பாய்மரக் கப்பலில் கடற்படை அதிகாரிகள் கோவாவில் இருந்து மொரிஷியஸ் தீவின் போர்ட் லூயிஸ் வரை சாகசப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

மூன்று பெண் அதிகாரிகள் உள்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த குழு 21 நாள்களுக்குள் 2500 கடல் மைல் தூரத்தைக் கடக்கும். கடினமான இந்தக் கடல் பயணத்தின் போது தீவிர வானிலை, பருவமழை, கரடுமுரடான கடல் நிலைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கருதப்படுகிறது.

கேரளாவில் போதைப்பொருள் கடத்திய காவல்துறை அதிகாரி கைது

திருவனந்தபுரம்: இடுக்கி மாவட்டம் முதலகோடம் பகுதியில் காவல்துறை உதவியுடன் போதைப்பொருள் விற்பனை நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் தொடர்புடைய காவல்துறையினரைப் பொறிவைத்துப் பிடிக்கத் திட்டமிட்டனர்.

மாறுவேடத்தில் சுற்றிய அதிகாரிகள், அந்தப் பகுதியில் போதைப்பொருளை விற்க வந்த ஷானவாஸ் என்பவரைப் பிடித்தனர். இவர் இடுக்கியில் உள்ள ஆயுதப்படை முகாமில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

ஷானவாசைக் கைது செய்த காவல்துறையினர், பின்னர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். இதுகுறித்த விசாரணை தொடர்கிறது.