சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கனத்த மழை பெய்துவரும் நிலையில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 22 பேர் உயிர் இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் எட்டு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும் சிலரைக் காணவில்லை என்று தேசியப் பேரிடர் மீட்புக் குழு தெரிவித்தது.
நிலச்சரிவிலும் வெள்ளத்திலும் பாதிக்கப்பட்டோரைத் தேடி மீட்கும் பணிகள் தொடரும் வேளையில், மருத்துவ உதவிப் பொருள்கள் பாதிக்கப்பட்டோரைச் சென்றடைவதை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏறத்தாழ 750 சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மணாலி-சண்டிகர் நெடுஞ்சாலை, சிம்லா-சண்டிகர் நெடுஞ்சாலை ஆகியவையும் இவற்றில் அடங்கும்.
காங்ரா மாவட்டத்தில் பாலம் ஒன்று பெருமழையால் இடிந்ததை அடுத்து சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாப்-இமாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள காங்ராவில் சக்கி ஆற்றின்மீது கட்டப்பட்ட 800 மீட்டா் நீள ரயில் பாலத்தின் இரண்டு தூண்கள் வெள்ளத்தால் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
துண்டிக்கப்பட்ட சாலைகளில் போக்குவரத்தைச் சீராக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
கனத்த மழையால், மாநிலத்தின் சில பகுதிகளில் தண்ணீர், மின்சார விநியோகம் தடைபட்டது.

