'ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதி'
அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் நேற்று முன்தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஆந்திராவுக்குச் சேரவேண்டிய ரூ. 32,625.25 கோடி நிதி, உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மாநில பிரிவினையின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும், மசோதாவில் தெரிவித்தபடி அமல்படுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார். அப்போது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அமைச்சர்: புதுச்சேரியில் தேசிய
கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்
புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார். முன்னதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதிய கல்விக் கொள்கை புதுச்சேரியில் நிச்சயமாக அமல்படுத்தப்படும் என்று ஒரு பள்ளி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
பாஜக நிர்வாகி 'டிக்டாக்' புகழ் சோனாலி மரணம்
கோவா: பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியும் டிக்டாக் பிரபலமுமான சோனாலி, போகத் (வயது 43) மாரடைப்பால் மரணமடைந்தார். சோனாலி உயிரிழப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தனது படத்தையும் பகிர்ந்து இருந்தார். சோனாலியின் அகால மரணம் பாஜகவினர் மத்தியிலும் அவரது டிக்டாக் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதம்பூர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் சோனாலியை நிறுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கோவா சென்றிருந்த சோனாலி மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார்.

