ஹைதராபாத்: குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக தெலுங்கானா கோஷமஹால் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் (படம்) கைது செய்யப்பட்டார்.
இவர் அண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த முனாவர் ஃபரூக்கி ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியை விமர்சித்துப் பேசியிருந்தார்.
இதனை அவர் ஒரு காணொளியாக வெளியிட்டார். அந்தக் காணொளி வெளியாகி பரவியது. அதற்கு அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
நள்ளிரவில் ஹைதராபாத் நகரம் முழுவதும் போராட்டங்கள் பரவியது.
அதனால் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு இருந்ததால், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங்கை தபீர்புரா காவல்நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
இது தொடர்பாக அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, பாஜகவில் இருந்து ராஜா சிங்கை, இடைநீக்கம் செய்ய அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் கைதுசெய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஒரு காணொளியை வெளியிட்டார்.
அதில், "நான் வெளியிட்ட காணொளியில் ஏதேனும் கடவுளின் பெயரைக் குறிப்பிட்டுள்ளேனா இல்லை, ஏதாவது சமிக்ஞையாவது குறிப்பிட்டிருக்கேனா? ஆனால், ஃபரூக்கி மிக மோசமாக விமர்சிக்கிறார்.
"ஆளும் டிஆர்எஸ் கட்சி பாஜகவின் குரலை நெரிக்கிறது. நான் எனது நம்பிக்கைக்காகப் போராடுகிறேன்.
"முதலில் எனது நம்பிக்கை. அப்புறம்தான் எனது அரசியல். நான் எதுவுமே சர்ச்சைக்குரிய விதத்தில் பேசாமலேயே எனது காணொளி யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
"நான் இன்னொரு காணொளியும் வெளியிடுவேன்," என்று கூறியிருந்தார்.
முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் எம்எல்ஏ ராஜா சிங்குக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

