மும்பை: பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையின் பல பகுதிகளில் 'மண்டல்' என்ற பெயரில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வழிபட்டு காணிக்கை வழங்குவார்கள்.
மும்பையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டம் எளிமையாக நடந்தது.
இந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்தி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் மும்பையின் பணக்கார கணபதி மண்டல் எனக்கூறப்படும் கிங்ஸ் சர்க்கிளில் உள்ள ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.316.40 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி. கணபதி மண்டல் இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.300 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜி.எஸ்.பி. கணபதி மண்டல் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலை 66 கிலோ தங்க நகைகள், 295 கிலோ வெள்ளி நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 31ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்படும் ஜி.எஸ்.பி. விநாயகர் சிலை, 5-வது நாளில் (செப்டம்பர் 4ஆம் தேதி) கரைக்கப்பட உள்ளது.
முன்னதாக வருகிற 29-ந் தேதி ஜி.எஸ்.பி. மண்டல் கணபதி சிலையின் அறிமுக நிகழ்ச்சி நடக்கிறது.

