புதுடெல்லி: நாட்டின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான அதானிக்குச் சொந்தமான நிறுவனம், என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 29 விழுக்காடு பங்குகளை வாங்க உள்ளதாக வெளியான தகவல் இந்திய ஊடகத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூத்த ஊடகவியலாளர் பிரனாய் ராய், ராதிகா ஆகியோர் என்டிடிவி நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இவ்விருவருக்கும் சொந்தமான ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் என்ற நிறுவனம் என்டிடிவியின் 29.18% பங்குகளை வைத்துள்ளது.
இந்தப் பங்குகளைத்தான் அதானி மீடியா குழுமம் மொத்தமாக வாங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் என்டிடிவி நிறுவனத்தின் பங்குகள் அதானி வசமாகும்.
இவ்வாறு ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதன் பங்குதாரர்களின் விருப்பமின்றி வாங்கப்படும் செயலை 'முறையற்ற கையகப்படுத்துதல்' அல்லது ஆங்கிலத்தில் 'ஹோஸ்டைல் டேக் ஓவர்' என்று தொழிற்துறையினர் அழைப்பதாக பிபிசி தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில், என்டிடிவி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அதானி குழுமத்தின் இந்தப் பங்குகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கையான முறையற்ற செயல்பாடு எனக் குறிப்பிட்டுள்ளது.
29.12% என்டிடிவி பங்குகளை வைத்திருக்கும் ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் 99.95% பங்குகளை அதானியின் ஊடக நிறுவனம் வாங்கியுள்ளதன் மூலம் என்டிடிவியை முழுமையாக அதானி நிறுவனத்தால் கட்டுப்படுத்த இயலும் எனவும் ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராதிகா, பிரனாய் ராய் ஆகியோர் இப்போது என்டிடிவி உரிமையை மாற்றுவது அல்லது பங்குகளை விலக்குவது குறித்து எந்த நிறுவனத்துடனும் விவாதிக்கவில்லை என்று என்டிடிவி நிறுவனம் திங்கட்கிழமை அன்று மும்பை பங்குச்சந்தைக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

