புதுடெல்லி: நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டத்தை துரிதப்படுத்த பொதுமக்களின் முதலீடுகளை வரவேற்பதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இதற்கான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருப்பதாகவும் சிறிய முதலீட்டாளர்களும் முதலீடு செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"பங்குச்சந்தையில் உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கான வழிமுறைகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். இதன் மூலம் பொதுமக்கள் நெடுஞ்சாலை அமைத்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
"இந்த முதலீட்டுக்கு 7 முதல் 8 விழுக்காடு லாபம் கிடைப்பது உறுதி செய்யப்படும். நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் என்பது 10 விழுக்காடு சரக்கு போக்குவரத்துக்காகவும் 90 விழுக்காடு பயணிகள் போக்குவரத்துக்காகவும் நடைபெறுகின்றன," என்றார் அமைச்சர் கட்காரி.
எனவே, தேசிய நெடுஞ்சாலைகளை விரைவாக விரிவுபடுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் 1.47 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிவடைந்துள்ளன என்றார்.

