புவனேஸ்வர்: கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் ஆசிரியர் பலர் ஒன்றுசேர்ந்து மாணவர்களை வகுப்பறையில் பல மணிநேரம் அடைத்து வைத்ததாக வெளியான தகவல் ஒடிசா மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்மாநிலத் தலைநகரான புவனேஸ்வரில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 34 மாணவர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை அம்மாணவர்களை ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்து வைத்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
சுமார் ஐந்து மணி நேரம் மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சாப்பிட ஏதும் கொடுக்காமலும் தண்ணீர் குடிக்கவிடாமலும் பல மாணவர்கள் தவித்த நிலையில், கழிப்பறைக்குச் செல்லவும்கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
பள்ளிக் கட்டணம் செலுத்தாததால்தான் இவ்வாறு அடைத்து வைத்திருப்பதாக அந்த மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இத்தகவலை தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் மாணவர்கள் அதற்கு மறுத்துவிடவே, வகுப்பறைக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் வீடு திரும்பிய பின்னர் இந்தத் தகவலை அறிந்த பெற்றோர் கடுங்கோபமடைந்து மறுநாள் பள்ளி முன்பு ஒன்றுகூடி, மறியலில் ஈடுபட்டதை அடுத்து இவ்விவகாரம் வெளியே தெரியவந்தது.
பள்ளி நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

